இனிப்பைத் தவிர்க்கும் புத்திசாலி கரப்பான் பூச்சிகள்!
கரப்பான் பூச்சிகளின் குணாதிசயத்தில் ஏற்படும் வேகமான வளர்ச்சி மரபணு மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்கு வீடுகளில் வைக்கப்படும் பொறிகளில் பயன்படுத்தப்படும் இனிப்பு உணவுகளை நாடாமலிருக்கும் குணாதிசயம் சிலவகை கரப்பான் பூச்சிகளிடத்தில் இயல்பாகவே வளர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகையான உணவுப் பொருட்களை அண்டாமல் இருக்கும் பழக்கம் இந்தக் கரப்பான் பூச்சிகளிடத்தில் ஒருசில ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்திருப்பதாகவும் வடக்கு கரோலினா அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தப் பழக்கம் பூகோள ரீதியிலும் உலகின் பல பாகங்களிலும் உள்ள கரப்பான் இனங்களிடத்திலும் வேகமாகப் பரவி வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 19 வகையான கரப்பான் பூச்சி இனங்களில் 7 இனங்களிடத்தில் சீனி உணவுப் பொறியில் சிக்காமல் அந்த உணவுகளை வெறுக்கும் போக்கு வளர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தமக்கு தீங்கு ஏற்படுத்தும் இனிப்பு உணவுகளைத் தவிர்க்கும் இயல்பு கரப்பான் பூச்சிகளின் அடுத்தடுத்த பரம்பரைகளில் இயல்பாகவே மரபணு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உயிராபத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பும் இயல்பு கொண்ட கரப்பான் பூச்சி வகைகள் பெருகும் வாய்ப்பு இதன்மூலம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.




