மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் செவ்வாய் 3-ஆமிடத்தில் உலவுவது விசேடமாகும். சந்திரனும் வார முன்பகுதியில் சிறப்பாக உலவுகிறார்.
சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும்.
மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 16-ஆம் தேதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். 17-ஆம் தேதி முதல் சூரியனும், சுக்கிரனும் 5-ஆமிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் மக்கள் நலம் மகிழ்ச்சி தரும்.
ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பத்தைக் காணலாம். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் குடும்ப நலனில் கவனம் தேவை.
பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 12, 15.
திசைகள்: தெற்கு, மேற்கு, தென்கிழக்கு,
எண்கள்: 6, 8, 9.
ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய.
சுக்கிரன் 4-ல் உலவுவது சிறப்பாகும். என்றாலும் பகை வீட்டில் பகைக் கிரகமான சூரியனுடன் கூடி இருப்பதால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். ஒரு சிலருக்குப் புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்றாலும் அவை பெரும்பாலும் சுபச்செலவுகளாகவே அமையும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகப் பேசிச் சமாளிப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். கணிதம், வியாபாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட தேதி: ஆகஸ்ட் 24.
திசை: கிழக்கு, தென்கிழக்கு.
எண்: 1, 6.
மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.
சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். புத்திசாலித்தனத்தாலும், செயல் திறமையாலும் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும், அரசுப்பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். மேலதிகாரிகளது பாராட்டுகளைப் பெற வாய்ப்புக் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கலைஞர்கள் அளவோடு வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். ஜன்ம ராசியில் செவ்வாயும், 4-ல் சனியும், 12-ல் கேதுவும் உலவுவதால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் ஈடுபட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 24.
திசை: கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.
எண்: 1, 3, 4, 5, 6.
கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.
சந்திரன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், சூரியன் 2-ல் இருந்தாலும், தன் சொந்த வீட்டில் இருப்பதாலும் பொருள்வரவு அதிகமாகும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். மனோபலம் கூடும். கலைஞானம் பளிச்சிடும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். குடும்பத்தில் அமைதி காணலாம். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் புகழ் கூடும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. ராகு 5-லும், குரு 10-லும், செவ்வாய் 12-லும் இருப்பதால் மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். மக்களின் நடத்தையில் கவனம் தேவை. தொழில் ரீதியாக இடமாற்றமோ, நிலை மாற்றமோ உண்டாகும். வாரப் பின்பகுதியில் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. இயந்திரப்பணியாளர்களும் இன்ஜினீயர்களும் விழிப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். முருகனையும் துர்கையையும் வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதி: ஆகஸ்ட் 19.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 6, 7, 8.
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் சூரியன் ஜன்ம ராசியிலேயே வலுத்து, குருவின் பார்வையைப் பெறுவதாலும் செவ்வாய், குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். எடுத்த காரியங்களைத் திறம்பட ஆற்றி வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விலகி ஓடுவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கலைஞானம் பளிச்சிடும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் சேரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 24.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.
எண்கள்: 1, 3, 6, 7, 9.
கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.
செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். செயல் திறமை பளிச்சிடும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். வியாபாரிகள் லாபம் கூடப் பெறுவார்கள். மாணவர்களுக்கு அனுகூலமான போக்குத் தென்படும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மாதர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்ய வேண்டிவரும். வாரப்பின்பகுதியில் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். கடல் வாணிபம் செய்பவர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். திரவப் பொருள் லாபம் தரும். சூரியன், குரு, சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் தந்தையாலும் மக்களாலும் சிறுசிறு பிரச்னைகள் சூழும். அதிகம் உழைக்க வேண்டிவரும். தொலைதூரத் தொடர்பால் அதிகம் நலமிராது. தலை, கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.
பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
அதிர்ஷ்ட தேதி: ஆகஸ்ட் 24.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 4, 5, 6, 9.
துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது நிறைவேறும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திதரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.
கடல் வாணிபம் லாபம் தரும். தந்தையால் நலம் பெருகும். அரசு ஆதரவு கிட்டும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்ப்புக்கள் இருக்குமென்றாலும் அதையும் தாண்டி வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நிலை உயரும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் 12-ல் சனியும் இருப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 22, 23 தேதிகள் சோதனையானவை. மனதுக்குச் சலனத்தைத் தரக்கூடிய சம்பவம் நிகழும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். 24, 25 தேதிகளில் தான, தர்ம காரியங்களிலும், தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். சர்ப்ப சாந்தியும், சனிப் பிரீதியும் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 24.
திசைகள்: வடகிழக்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 3, 5, 6.
விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் வலுத்திருப்பதாலும், குருவின் பார்வையைப் பெறுவதாலும் செய்தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். தந்தையால் நலம் உண்டாகும். அரசாங்கத்தாராலும், உயர் அதிகாரிகளாலும் அனுகூலம் ஏற்படும். சனி 11-ல் இருப்பதால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். செவ்வாய் 8-லும், குரு 6-லும், ராகு ஜன்ம ராசியிலும் கேது 7-லும் இருப்பதால் உடல்நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் மன அமைதி கெடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். வாரத்தின் கடைசி இரண்டு நாட்களில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக, யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 21, 23 தேதிகள் சுமாரானவை.
திசைகள்: கிழக்கு, மேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 1, 6, 8.
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.
ராசிநாதன் குரு 5-லும், 9-ஆம் வீட்டோன் சூரியன் தன் சொந்த வீட்டிலும் உலவுவதால் உங்கள் எண்ணங்கள் இனிது நிறைவேறும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பண வரவு கூடும். மகப்பேறு, மக்களால் பாக்கியம் உண்டாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சாதுக்கள், மகான்களின் தரிசனம் கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கப் பணிகள் நிறைவேறும். அரசியல்வாதிகள் தங்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கடன் தொல்லை குறையும். நல்லவர்களின் நட்புறவு கிட்டும். அதனால் அனுகூலமும் உண்டாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வியாபாரம் பெருகும். திறமை வீண்போகாது. 12-ல் ராகு இருப்பதால் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையைத் தொடர்ந்து வழிபடவும். பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். வீண் செலவுகளைத் தவிர்ப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 24.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.
எண்கள்: 1, 3, 6, 7, 8.
மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.
செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாரம், தளவாடங்கள், நிலபுலங்கள் ஆகியவை லாபம் தரும். கலைத்துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் கூடும். கறுப்பு நிறமுள்ள ஒருவர் உங்களுக்கு உதவ முன்வருவார். ஜலப்பொருட்கள் லாபம் தரும். போக்குவரத்துச் சாதனங்கள் ஆதாயம் கொண்டுவரும். 4-ல் குரு இருந்தாலும் அவரது பார்வை பலத்தால் பிரச்னைகள் குறையும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் செலவுகள் குறையும். 5-ல் கேது இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. சூரியன் 8-ல் இருப்பதால் உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட நேரலாம். ராசிநாதன் 9-ல் இருப்பதால் தர்ம சிந்தனை வளரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். விநாயகரை வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 24.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
எண்கள்: 4, 6, 9.
கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
சந்திரன், புதன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். எதிர்ப்புக்கள் குறையும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கடல் வாணிபம் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் அதிகம் பெறலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தின் மூலம் நலம் உண்டாகும். குரு பலம் குறைந்திருப்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பார்க்கவும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. நண்பர்களே கூட விரோதிகளாவார்கள். 4-ல் கேது இருப்பதால் அலைச்சல் கூடும். தாய் நலம் பாதிக்கும். சுகம் குறையும். 5-ல் செவ்வாயும் 7-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோரும் இருப்பதால் மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் பிரச்னைகள் சூழும். ராசிநாதன் சனி 8-ல் இருப்பதால் மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். எதையும் சுலபமாக நிறைவேற்றிவிட இயலாமல் போகும். அதிகம் உழைத்தாலும் அதற்கான பயன் கிடைக்காமல் போகும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். ஜாதக பலம் இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 24.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு.
எண்கள்: 4, 5.
மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.
சூரியன், குரு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகம், அரசியல், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் பெருகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். எலக்ட் ரானிக்ஸ், எலக்ட் ரிக்கல் இனங்கள் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பணவரவு அதிகமாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு. பேச்சின் மூலம் ஜீவனம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். முகப் பொலிவு கூடும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். கடன் உபத்திரவம் குறையும். பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மக்களாலும், பெரியவர்களாலும் நலம் உண்டாகும். 5-ல் புதன் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படவும். 4-ல் செவ்வாயும், 7-ல் சனியும், 9-ல் ராகுவும் இருப்பதால் பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. சுக்கிரன் 6-ல் இருப்பதால் கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சங்கடங்கள் சூழும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. இளைய சகோதரிகளால் பிரச்னைகள் ஏற்படும். சக்தியையும், மகாலட்சுமியையும் வழிபடவும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஆகஸ்ட் 19, 24.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு.
எண்கள்: 1, 3, 7.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.