பொதுப்பலன்
நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 15-ம் தேதி வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி லக்னம் மற்றும் ரிஷபம் நவாம்சத்தில், சௌபாக்கியம் நாம யோகத்தில், பத்தரை நாமகரணத்தில் நேத்திரம் நிறைந்த மந்த யோக நன்னாளில் 2016-ம் ஆண்டு பிறக்கிறது. (2+0+1+6=9) எண் ஜோதிடப்டி 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகிய ஒன்பது வருவதால் இந்த ஆண்டு மிகப் பரபரப்பாக இருக்கும். மக்கள் சின்னச் சின்ன ஆசைகளில் நாட்டம் கொள்வார்கள். சட்டங்கள் கடுமையாகும். கருப்புப் பணத்திற்கு வழி பிறக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் தங்கம் விலை உயரும்.
அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும். பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். லக்னாதிபதியாகிய புதன் குரு பகவான் வீட்டிலும் குரு பகவான் புதன் வீட்டிலும் பரிவர்த்தனா யோகம் பெற்று அமர்ந்திருப்பதால் பள்ளிக், கல்லுரிகளில் புதிய பாடத்திட்டம் அமலாகும். கல்விக் கடன் பெறும் முறை எளிதாகும். மத்திய மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் திருக்குறள் கட்டாயமாக்கப்படும். செவ்வாயும் சுக்கிரனும் பரஸ்பரம் மாறி அமர்ந்த நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகள் சூடுபிடிக்கும். மக்களிடையே கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் அதிகரிக்கும். 27.2.2016 முதல் 9.9.2016 வரை எதிரெதிர் கிரகங்களான செவ்வாயும் சனியும் செவ்வாயின் வீட்டில் சேர்ந்து காணப்படுவதால் தீவிரவாதிகளால் இளைஞர்கள் சீரழிவார்கள்.
குண்டுவெடிப்பு, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, ஆட்சி கவிழ்தல், தலைவர்களின் உயிருக்கு ஆபத்து, பருவம் தவறி மழை, கனிம, கரிம வளங்கள் கொள்ளை போகுதல் என்றெல்லாம் நிகழும். சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் வக்கிரமாவதால் ராமர் கோயில், பாபர் மசூதிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். மதக் கலவரங்களால் நாட்டின் பெருமையும் பொருளாதாரமும் பின்னோக்கித் தள்ளப்படும். அரசியலில் ஆள்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாட்டால் போராட்டத்தில் குதிப்பார்கள். கம்ப்யூட்டர் துறை மீண்டும் புத்துயிர் பெறும். சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
மேஷம்
மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்ரன் அமர்ந்து தனஸ்தானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பண வரவு அதிகரிக்கும். சமயோஜிதமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை புதுப்பிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பூர்வீகச் சொத்தைச் சீர்திருத்தம் செய்வீர்கள். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் ஆகியவற்றால் வீட்டில் களைக்கட்டும்.நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பு வட்டத்தால் பலனடைவீர்கள். குற்றம், குறைகள் கூறிக்கொண்டிருந்த உறவினர்களின் மனது மாறும். இந்த ஆண்டு முழுவதும் அஷ்டமத்துச் சனி நீடிப்பதால் இனிமையாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். உங்களுக்கு நெடுங்காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம்.தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். 08.01.2016 முதல் கேது சாதகமாவதால் இந்த வருடத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் மூலமாக ஆதாயமடைவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையைச் செலுத்திப் பிரார்த்தனையை இந்த வருடம் நிறைவேற்றுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பித்து முன்னின்று கும்பாபிஷேகம் நடத்துவீர்கள். 5-ல் ராகு நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்திலும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை 6-ம் வீட்டில் குரு மறைவதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வரக்கூடும். வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்திவிட்டுச் செல்வது நல்லது. 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வாய்தா வாங்கியதால் தீர்ப்பு தள்ளிப்போன வழக்கு சாதகமாகும். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் குடும்பத்தில் சச்சரவுகள் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் பாதிப்படைவார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு ஏற்படும். மார்ச், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் வருடமிது.
ரிஷபம்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்பவர்களே! உங்கள் ராசியை ராசிநாதன் சுக்கிரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வசதி, வாய்ப்புகள் கூடும். 01.01.2016 முதல் 07.02.2016 வரை அதிசாரத்திலும் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் 5-ம் வீட்டில் அமர்வதால் தன்னிச்சையாக முடிவெடுப்பீர்கள். மகனுக்கு நல்ல பண்புள்ள பெண் மணமகளாக அமைவார். மகளுக்கு இருந்துவந்த மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்று வலி விலகும். குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள்.
உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். சிலர் புது வீட்டில் குடிபுகுவீர்கள். பிள்ளைகளால் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு 4-ல் அமர்வதால் கோபமும், அலைச்சலும், செலவுகளும் அதிகமாகும். 08.01.2016 முதல் ராகு 4-ம் வீட்டிலும், 10-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடும். உத்யோகத்திலும் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். முடிந்தவரை இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டு மனை, நிலம் வாங்கும்போது சொத்துக்குரிய தாய்ப்பத்திரத்தைக் கேட்டு வாங்குங்கள். வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும்.வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்கள் ராசிக்குச் சாதகமான வீட்டில் சந்திரன் நிற்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப இடித்துக் கட்டுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்களது ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால் குடும்பத்தில் விவாதங்கள் வந்து செல்லும். இந்த ஆண்டு முழுக்க சனி சரியில்லாததால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுங்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் சிலர் பழகுவார்கள். சின்ன விவகாரங்களுக்கு நீதிமன்றம் செல்ல வேண்டாம். பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.
27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயுடன் சனி சேர்வதால் சட்டத்திற்குப் புறம்பாக யாருக்கும் உதவ வேண்டாம். மனைவிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். சகோதரங்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி மூலமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் அநாவசியப் பேச்சுகள் வேண்டாம். பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். 9.9.2016 முதல் 25.10.2016 வரை வாகனப் பழுது, விபத்து வந்து நீங்கும். அலுப்பு, சலிப்புகளை அகற்றினால் வெற்றி பெறும் வருடமிது.
மிதுனம்
எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! இந்த ஆண்டு முழுக்க சனி வலுவாக இருப்பதால் குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் தீரும், கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலை கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி பேசிப் புகழடைவீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மீதிப் பணத்தைத் தந்து சொத்துப் பத்திரப் பதிவை முடிப்பீர்கள். 08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் வீடு வாங்கும் கனவு நனவாகும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். உங்கள் ராசிக்கு தைரிய வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.தேர்வில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். மகனுக்குத் திருமணம் முடியும். வீடு கட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். குரு பகவான் சாதகமாக இல்லாததால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும், விபத்து நேரிடலாம். இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் விவாதங்கள் மற்றும் கோபம் வேண்டாம். மன அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். நல்லவர்கள் போலப் பேசி உங்களைப் புகழ்பவர் களைத் தள்ளியே வைத்திருக்கவும். ராசிநாதன் புதனும் சூரியனும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.உறவினர், நண்பர்களில் உண்மை யானவர்களை இனங்காணுவீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தைத் திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டிவரும். அலுவலகங்களில் வேலைபுரிபவர்கள் கூடுதல் நேரத்தைச் செலவழித்து, பணிக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்ற வேண்டிவரும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மார்ச், ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கையெழுத்தாகும். உத்யோகத்தில் ஒரு ஸ்திரமற்ற போக்கு நிலவும். மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். நிதானமாகக் கையாண்டால் வெற்றி நிச்சயம். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள். வருஷ ஆரம்பத்தில் மலையாய் தோன்றிய விவகாரங்கள் வருட இறுதியில் பனியாய் மறையும். திட்டமிட்டுச் செயல்பட்டால் முன்னேறும் வருடமிது.
கடகம்
காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! சுக்கிரன் வலுவாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும், சோர்வு நீங்கும், கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பதவி உயர்வுகள் உண்டு. அலுவலகம் வழியாகவே அயல்நாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வருடம் முழுக்க சனி உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டிலேயே நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். அவர்களைப் பாதை மாறாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளுடன் இயல்பாகப் பேசிப் பழகுவதற்கு நீங்கள் அதிக நேரம் ஒதுக்குவது நல்லது. அவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டாமல் அவர்களின் திறமைகளையும் நீங்கள் பாராட்டிப் பேசுவது நல்லது.புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டிவரும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் புகழ், கவுரவம் ஒரு படி உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சகோதரர்களுக்குள் நிலவிவந்த போட்டி பூசல்கள் விலகும். விலை உயர்ந்த மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது மனை வாங்கும் யோகம் உண்டு. நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்பு வரும். 08.01.2016 முதல் ராகு பகவான் 2-ம் வீட்டிலும், கேது 8-ம் வீட்டிலும் அமர்வதால் கண்பார்வையைப்பரிசோதித்து
க் கொள்ளுங்கள். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்து போகும். அநாவசியப் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. பரிச்சயமில்லாதவர்களிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம்.
தானே முயன்று முன்னுக்கு வரப்பாருங்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரைக் கலந்தாலோசித்துப் புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். மார்ச், ஏப்ரல், ஜூன் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர் விலகுவார். சந்தைக்கு வரும் புதிய பொருட்களை விற்று லாபம் காண்பீர்கள். கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வுடன், வேலைச் சுமையும் கூடும். இடம் மாற்றம் கிடைக்கும். இருப்பதை வைத்து நிம்மதி அடையும் மனதால் மற்றவர்களைக் கவரும் வருடமிது.
சிம்மம்
ஆளும் குணமும், ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த வாகனங்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். மெடிகிளைம் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. 08.01.2016 முதல் ஜென்ம ராசிக்குள் ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமான மாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சினையால் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். இந்த வருடம் முழுக்க அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். செவ்வாயும், சனியும் 27.02.2016 முதல் 9.9.2016 வரை 4-ல் தொடர்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும், சேமிப்பு கரையும், உங்களின் அடிப்படை குணம் மாறும். வீண் விவாதங்கள் வேண்டாம். வழக்கிலும் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அறிவுபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.குழந்தை பாக்கியம் உண்டு. ஆனால் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை குரு உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். டிசம்பரில் வாகன விபத்துகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் புதிய பொறுப்புகளால் திணறுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். உழைப்புக்கேற்ற அந்தஸ்தைப் பெறுவீர்கள். சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் பேசி ராஜதந்திரத்தால் சாதிக்கும் வருடமிது.
கன்னி
இனம், மொழி, மதம் எனப் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் சகஜமாகப் பேசி உதவுபவர்களே! உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும் பயணங்களும் உங்களைத் துரத்தும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள்தான் முன்னின்று நடத்த வேண்டிவரும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்களிடம் குறைத்துப் பேச வேண்டாம். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இந்த ஆண்டு முழுக்க சனி ஆதரவாக இருப்பதால் எதிரணியில் இருப்பவர்களும் ஆதரிப்பார்கள். கம்ப்யூட்டர், லேப்டாப் என பல எலக்ட்ரானிக் சாதனங்களைப் புது மாடலில் வாங்குவீர்கள். சமையலறையையும், படுக்கை அறையையும் அதிகம் செலவு செய்து நவீனமாக்கு வீர்கள். புது வேலை கிடைக்கும்.மார்ச் மாதம் முதல் யோகப் பலன் அதிகரிக்கும். தள்ளிப்போன திருமணமும் கூடிவரும். 08.01.2016 முதல் ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் இடத்திலும் மறைவதால் எதிரும் புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். மாதக்கணக்கில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த வேலைக ளெல்லாம் முடிவடையும். கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறை வேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை குரு அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை ஜென்ம குருவாகத் தொடர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த பாருங்கள். மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, சிறுநீரகத் தொற்று வரக்கூடும். நடைப் பயிற்சி அவசிய மாகிறது. உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக்கொள்வீர்கள். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் காசோலை தருவது நல்லது. ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் மாதம் தவறாமல் அசலைச் செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டே போகிறதே என்று அச்சப்படுவீர்கள். 27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால் தைரியம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யப்பாருங்கள். உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாகும். இந்த புத்தாண்டு புதிய பாதையில் பயணித்துப் புதிய நண்பர்களால் சாதிக்க வைக்கும்.
துலாம்
எப்போதும் லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்களே! உங்கள் ராசிக்குப் பதினோராவது வீட்டில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பி-கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வருங்காலத்திற்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீனரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். 08.01.2016 முதல் ராகு லாப வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் அமர்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வசாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதார வசதியும் பெருகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சினைகள் தீரும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. மகனின் உயர் கல்வி, உத்தியோகத்திற்காகச் சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். இந்த வருடம் முழுக்க ஏழரைச் சனியில் பாதச் சனி தொடர்வதால் பித்தப் பையில் கல் வர வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் காலில் அடிப்படும்.சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் இருக்கும், நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அளவாகப் பழகுவது நல்லது. இந்தப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால் சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும். செல்போன், லேப்டாப், ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு 12-ம் வீட்டில் மறைவதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தர வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும்.
வாகனத்தை எடுக்கும்முன் எரிபொருள் மற்றும் பிரேக்கைச் சரி பார்த்துச் செல்வது நல்லது. கோயில் கும்பாபிஷேகத்திற்குத் தலைமைத் தாங்குவீர்கள். 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 26.02.2016 வரை உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதாலும் மற்றும் 27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதாலும் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் வரும். திருமண முயற்சிகள் சற்றுத் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் புதிதாக முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் வருடமிது.
விருச்சிகம்
தன்னலமற்ற போக்கும், வழிநடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! உங்களுடைய ராசியிலேயே சனி அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச் சுமை அதிகமாகிக்கொண்டே போகும். ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை காட்டுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகளும் இந்த வருடம் முழுக்கத் தேவைப்படும். வாய்வுப் பதார்த்தங்கள், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மே மாதத்தில் சிறு விபத்து வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது சூரியனும், புதனும் 2-ல் நிற்பதால் கம்பீரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் மத்தியில் கவுரவம் ஒரு படி உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். 01.01.2016 முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.
தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். கடன் அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையையும் உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். 08.01.2016 முதல் ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-ம் வீட்டிலும் அமர்வதால் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். சிலர் சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்குவீர்கள். தாயாருக்குச் சிறிய அளவில் அறுவை சிகிச்சை, கணுக்கால் வலி, நெஞ்சு வலி வந்து போகும். அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டாம். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டுப் பலவீனமடைவதால் பணப் பற்றாக்குறை, சொத்துச் சிக்கல்கள், பழைய கடன் பற்றிய கவலைகள், தூக்கமின்மை வந்து செல்லும். சாலைகளைக் கவனமாகக் கடக்கவும். வியாபாரத்தில் லாபம் உயரும். இந்த வருடம் தீர்வு காண்பதாகவும், ஒரளவு நிம்மதி தருவதாகவும் அமையும்.
தனுசு
சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் மனோபலம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் உள்ள திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஏழரைச் சனி இருப்பதால் உங்களின் நெருங்கிய நண்பர்களைப் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். திடீர் சிநேகிதர்களை வீட்டிற்குள் அழைத்துவர வேண்டாம். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். ராசிக்குள்ளேயே சூரியனும், புதனும் நிற்பதால் வி.ஐ.பி.-களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் 10-ம் வீட்டில் நிற்பதால் இடைவிடாமல் உழைத்தும் கையில் எதுவும் தங்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போகும். சிறிய ஏமாற்றங்கள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வரும். வீட்டில் வர்ணம் பூசுவது, விரிவுபடுத்துவது, கழிவு நீர், குடிநீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். 8.01.2016 முதல் ராகு பகவான் 9-ம் வீட்டிலும், கேது 3-ம் வீட்டிலும் அமர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
பாகப்பிரிவினைப் பிரச்சினையில் தலையிட வேண்டாம். இளைய சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் பிள்ளைகளால் செலவு, அலைச்சல், சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது. வியாபாரம் சூடுபிடிக்கும். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதால் ஆதாயமடைவீர்கள். மேலதிகாரிகளிடம் பணிந்துபோங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்று தாமதமாகிக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு விவேகமான முடிவுகளால் வெற்றி பெற வைக்கும்.
மகரம்
எந்தச் சூழ்நிலையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர்களே! எட்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் திருமணம், கிரகப் பிரவேசத்தையெல்லாம் எடுத்து நடத்த வேண்டிவரும். புராதனமான ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். இடையிடையே பணப் பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டிவரும். அநாவசிய உறுதிமொழிகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். உடன்பிறந்தவர்களுக்காகப் பரிந்து பேசுவதால் மனைவியுடன் இடைவெளி அதிகமாகும். பிள்ளைகளால் புகழடைவீர்கள். மகளின் திருமணத்தை உற்றார், உறவினர் வியக்கும்படி நடத்துவீர்கள். இந்த ஆண்டு முழுக்க ராசிநாதன் சனி பகவான் லாப ஸ்தானத்திலேயே வலுவாக அமர்ந்திருப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமை கூடும்.
தள்ளிப்போன பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பொதுநலத் தொண்டுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். 08.01.2016 முதல் ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் அமர்வதால் சாணக்கியத்தனமாகப் பேசிச் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல் தீரும். உறவினர், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். பல் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். அநாவசியமாகப் பிறர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் மகளுக்குத் திருமணம் கூடிவரும், வேலை கிடைக்கும். சிலர் வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் உயர்வீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார்.
பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்ந்து நிற்பதால் உங்களுடைய தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்குப் பண உதவிகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. உங்களின் கோரிக்கையை நேரடி மூத்த அதிகாரி ஏற்றுக்கொள்வார். இந்தப் புத்தாண்டு உங்கள் புதிய அணுகுமுறையால் வி.ஐ.பிகளால் இனங்கண்டறியப்படுவதாக அமையும்.
கும்பம்
உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை அறிந்தவர்கள் நீங்கள்! இந்த வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் தங்களது தவறை உணருவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நல்ல இடத்தில் மணப்பெண்ணும் அமையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். இந்த வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று வருவீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சில இடங்களில் சில நேரங்களில் ஆழமான உறவுகளைவிடப் பணத்திற்குத்தான் மரியாதை கிடைக்கிறது என்ற உண்மையைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள். சில சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணர்வீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை 7-ம் வீட்டில் அமர்ந்து குரு, உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் சுருங்கியிருந்த முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும்.
08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் முன்கோபம் அதிகமாகும். நேரம் கிடைக்கும்போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். குடும்பத்திலும் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். 27.02.2016 முதல் 9.09.2016 வரை உங்கள் ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்வதால் அலர்ஜி, நோய்த் தொற்று, ஆரோக்கியக் குறைவு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கொஞ்சம் முரண்டுபிடிக்கத்தான் செய்வார்கள். பங்குதாரர்களால் விரயங்கள் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களில் ஒரு சிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய வருடமிது.
மீனம்
கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள். உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். நெடு நாட்களாகத் திட்டமிட்ட சில காரியங்கள் இப்போது முடியும். 08.01.2016 முதல் ராகு 6-ம் வீட்டில் அமர்வதால் சாணக்கியத்தனமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்கியம் சீராகும். ஷேர் மூலமாகப் பணம் வரும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். கேது 12-ம் வீட்டில் மறைவதால் செலவுகள் அதிகமாகும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் 8-ல் நிற்பதால் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பு உணர்வு, சலிப்பு வந்து செல்லும். சகோதரர்கள் கோபப்படுவார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். ஆகஸ்ட் மாதத்தில் சிறிய விபத்துகள் வந்து நீங்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மனைவிக்கு வேலை கிடைக்கும். தாய்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த வந்த தடைகளும் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் அடுத்தடுத்த வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். இந்தாண்டு முழுக்க சனி பகவான் 9-ம் வீட்டிலேயே இருப்பதால் வேற்று மதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயம் உண்டாகும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தைக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து நீங்கும். நல்ல பதவியில் இருக்கும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. மனஇறுக்கம் உண்டாகும். வெளிப்படையாகப் பேசிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். எதிர்பார்த்த பதவி உயர்வு தடையின்றிக் கிடைக்கும். முற்பகுதி முள்ளாக இருந்தாலும், பிற்பகுதி தேனாகும் வருடமிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.