கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 21 மே, 2010

விக்ருதி ஆண்டு ராசி பலன்

மிதுனம்
விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை அறிந்த நீங்கள் இலக்கை எட்டும் வரை ஓயமாட்டீர்கள்.
சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களை காயப்படுத்தாத நீங்கள் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள். உங்கள் ராசிநாதன் புதனின் நட்சத்திரத்தில் விக்ருதி ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். யோகாதிபதி சுக்கிரனுடன் புதனும் லாபவீட்டில் வலுவடைந்து இருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்.
பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் இந்த விக்ருதி ஆண்டுபிறப்பதால் உங்கள் அந்தஸ்து உயரும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்ட பிரிவுகள், கருத்து வேறுபாடுகள் விலகும். அநாவசிய செலவுகளை குறைப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாங்கியிருந்த கடனை எப்படி அடைப்பது என வருந்தினீர்களே! இனி அதற்கான வழி பிறக்கும். நெடுங்காலமாக குழந்தை இல்லையே என வருந்திக் கொண்டிருந்தவர்களுக்கு பிள்ளை பாக்யம் உண்டு. வயிற்றுக் கோளாறு, மூட்டுவலி மற்றும் நெஞ்சுவலி இவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பாதியிலேயே தடைபட்டுப்போன வீடு கட்டும் பணியை முடிக்க லோன் கிடைக்கும். 2.5.10 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிற்கு செல்வதால் பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். யாருக்கும் காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். ஆனால், குருபகவான் உங்களின் யோகாதிபதிகளின் சனி, புதன் ஆகியோரின் நட்சத்திரத்தில் செல்வதால் 10ம் இடத்து குருவால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் குறையும். இந்த வருடம் முழுக்க அர்த்தாஷ்டமச் சனி இருப்பதால் உடல்வலி, தூக்கமின்மை, சோர்வு ஏற்படும். தாயாரின் மனம் புண்படும்படி பேசாதீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். சொந்த வாகனத்தில் தொலைதூர இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீட்டில் கழிவுநீர் அடைப்பு, குடிநீர் பிரச்னை, மின் கசிவால் ஆபத்து வந்து நீங்கும். சனிபகவானை குரு பார்த்துக் கொண்டே இருப்பதால் அர்த்தாஷ்டமச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ராசிக்குள் கேது தொடர்வதால் போதை வஸ்துக்களைத் தவிர்ப்பது நல்லது. தலைச்சுற்றல் வரும். எண்ணெயில் பொரித்த உணவுகள், வெளி உணவுகள் வேண்டாமே. அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். ராசிக்கு 7ம் வீட்டில் ராகு நிற்பதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 1.9.10 முதல் 31.12.10 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 5ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். உங்கள் மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். 13.10.10 முதல் 26.11.10 வரை சுக்கிரன் வக்ரமாவதால் அந்த காலக் கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். 6.1.11 முதல் 13.2.11 வரை செவ்வாய் 8ல் மறைவதால் வீண் விரயம், சிறு விபத்து, சகோதரருடன் கருத்து மோதல் வந்து நீங்கும். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. கன்னிப்பெண்களே! புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வேலையிலிருந்து விலகி சிலர் உயர் கல்வியில் சேர்வீர்கள். வருடப் பிற்பகுதியில் திருமணம் கூடி வரும். மாணவர்களே! விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் படிக்க அழைப்பு வரும். வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். கொடுக்கல்&வாங்கலில் இருந்த இழுபறிநிலை மாறும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அனுபவமிகுந்த புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். மருந்து, கமிஷன், ஷேர், மர வகைகளால் ஆதாயமுண்டு. உத்யோகஸ்தர்களே! 10ல் குரு தொடர்வதால் உறுதியற்ற நிலை உண்டாகும். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். ஆவணி, ஐப்பசி, பங்குனி மாதங்களில் உங்கள் நிலை உயரும். கலைஞர்களே, மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகளே, கோஷ்டிச் சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். விவசாயிகளே, தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். இந்த விக்ருதி ஆண்டு சுமைகளை அதிகம் சுமக்க வைத்தாலும் இறுதியில் வெற்றியை தரும். பரிகாரம்: அஸ்தம் நட்சத்திர நாளில், விழுப்புரத்திற்கு அருகிலுள்ள பரிக்கல் தலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மரை தரிசியுங்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.