சுக்கிரனும், புதனும் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் சமயோசித புத்தியுடன் இனி நடந்து கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் 12ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். யாருக்கும் உறுதிமொழி தரவேண்டாம். 2.5.10 முதல் உங்கள் ராசிநாதனான குருபகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் மனதில் பயம், சின்ன சின்ன போராட்டம் என்று வந்துபோகும். 28.5.10 முதல் உங்கள் யோகாதிபதி செவ்வாய் வலுவடைவதால் தந்தை மற்றும் சகோதரரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகனுக்கு இருந்த நோய் விலகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். மகளுக்கு கல்யாணம் கூடி வரும். சுபச்செலவு உண்டு.
இந்த வருடம் முழுக்க ராசிக்கு 7ம் வீட்டிலேயே சனி அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். கருத்து மோதல்களாலும் ஈகோ பிரச்னையாலும் பிரிய வேண்டிய சூழ்நிலை வரக்கூடும். எனவே விட்டுக் கொடுத்து போகப் பாருங்கள். எதிர்பாராத செலவுகள், திடீர் பயணங்கள், ஏமாற்றங்கள் என வரக்கூடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தனியார் சிட்பண்ட், அரசால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்யாதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகள் அடிக்கடி கோபப்பட்டு சண்டையிடுவார்கள். அவர்களின் பிடிவாதத்தை மாற்றும் விதமாக இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஈடுபடுத்துங்கள். மற்றப் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு உங்கள் பிள்ளைகளை மட்டம் தட்டிப் பேசவேண்டாம். சகோதரர்களின் ஆதரவு கிட்டும். என்றாலும் அலைச்சலும் உண்டு. வயிற்று வலி, நெஞ்சு வலி வரக்கூடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரையின் அளவை சரிபாருங்கள். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவது நல்லது. சில சமயங்களில் விபத்துகள் நிகழும். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசவேண்டாம்.
இந்த வருடம் முழுக்க கேது 4ம் வீட்டில் தொடர்வதால் சில நேரங்களில் தூக்கமில்லாமல் போகும். ஆன்மிக பயணம் சென்று வருவதால் மனநிம்மதி அடைவீர்கள். பிரபலங்களுடன் கவனமாகப் பழகுங்கள்.
அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். நண்பர்களின் உதவியால் உங்கள் மகனுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்யுங்கள். ராகு 10ம் வீட்டில் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் உங்களைப்பற்றிய மதிப்பு, மரியாதை கூடும். கௌரவப் பதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்கநிலை மாறும். அவ்வப்போது வழக்கறிஞருடன் மோதல் வரும். 1.9.10 முதல் 31.12.10 வரை சுக்கிரன் 8ல் மறைவதால் திடீர் பயணங்கள் உண்டு. திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரங்களில் கவனம் தேவை. படிப்பில் தடை வரக்கூடும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி வந்துபோகும். மாணவர்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களின் சகவாசங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்.
வியாபாரிகளே! ஆர்வக் கோளாறால் முதலீடு செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். இருப்பதை வைத்து சமாளிக்கப் பாருங்கள். கூட்டுத் தொழில் வேண்டாமே. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். தொழில் ரீதியாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! நெருக்கடிகளும், வேலைச்சுமைகளும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களின் திறமையை குறைத்து மதிப்பிடுவார்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். மார்கழி, தை மாதங்கள் சாதகமாக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய சில புதிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். மறதி, கவனக்குறைவால் தவறுகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்களே, உங்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூற வேண்டாம்.
அரசியல்வாதிகளே, விட்டுக் கொடுத்துப் போகவேண்டி வரும். விவசாயிகளே, பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
இந்த விக்ருதி ஆண்டு சில நேரங்களில் உங்களை முள்ளின் மேல் நடக்க வைத்தாலும், விடாமுயற்சியால் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
திருவண்ணாமலை அருணாசல மலையை பௌர்ணமி திதி அல்லது பூரம் நட்சத்திரம் நாளில் வலம் வந்து வணங்குங்கள். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.