சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே எண்ணங்களை வெளிப்படுத்தும் நீங்கள், சுற்றி இருப்பவர்களை வழிநடத்திச் செல்வதிலும் வல்லவர்கள்.
உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்கிரனும் புதனும் சுகஸ்தானமான 4ம் வீட்டில் கேந்திரபலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் திடீர் யோகம் உண்டாகும். வசதி, வாய்ப்புகள் பெருகும். மறைந்திருந்த நீங்கள் இனி பிரகாசிப்பீர்கள். எவ்வளவு சம்பாதித்தும் கைக்கும், வாய்க்குமே சரியாகப் போனதே, இனி கொஞ்சம் எடுத்து வைக்கும் அளவிற்கு வருமானம் கூடும்.
உங்கள் பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் முன்னோர் வழி சொத்துகள் வந்துசேரும். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். தன வீடான 2ம் வீட்டில் குருவும் நிற்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புயல் வீசிய குடும்பத்தில் அமைதி நிலவும்.
சித்திரை மாதத்தில் பழைய நகைகளை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். குடிநீர் மற்றும் காற்றோட்ட வசதியில்லாத வீட்டை மாற்றிவிட்டு, வசதி மிகுந்த வீட்டிற்கு மாறுவீர்கள். மனைவிக்கு அவ்வப்போது கர்ப்பச்சிதைவு ஏற்பட்டதே, இனி குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளின் சுதந்திரத்தில் இனி தலையிட மாட்டீர்கள். மகன் திருமணம் ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக்கொண்டிருந்ததே, வைகாசி, ஆனி மாதங்களில் தடபுடலாக நடந்து முடியும்.
வருடம் முழுவதும் 9ம் வீட்டில் சனி தொடர்வதால் தந்தையாரின் உடல்நிலை லேசாக பாதிக்கும்.
தந்தைவழிச் சொத்துகளில் வில்லங்கம் வரக்கூடும். என்றாலும் உங்கள் ராசிநாதனான சனிபகவானை குரு பார்ப்பதால் பிரச்னைகளை எளிதாக சமாளிப்பீர்கள். 6ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். ஆனால் ராகு 12ல் மறைந்திருப்பதால் ஓய்வு எடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும்.
2.5.10 முதல் 3ல் குரு மறைவதால் முயற்சிகளில் சில முட்டுக்கட்டைகள் வரும். சில விஷயங்களை போராடி முடிக்க வேண்டி வரும். நெஞ்சு வலி, கால், மூட்டு வலி வந்துபோகும். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகள் வந்துபோகும். என்றாலும் குருபகவான் உங்கள் யோகாதிபதிகளான சனி, புதன் நட்சத்திரங்களில் செல்வதால் வளர்ச்சி தடைபடாது. பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடி மாதத்தில் வீண் குழப்பங்கள், அப்பாவுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஆவணி மாதத்தில் வி.ஐ.பிகளின் ஆதரவால் சில வேலைகளை முடிப்பீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். 1.9.10 முதல் 31.12.10 முடிய உங்கள் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் புது வேலை கிடைக்கும். வருமானம் உயரும். சிலருக்கு சொந்தத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.
கன்னிப்பெண்களே! நிரந்தர வேலை கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறு, ஒற்றைத் தலைவலி நீங்கும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். மாணவர்களே, உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கும். கெட்ட பழக்கங்கள் விலகும். மதிப்பெண் அதிகரிக்கும்.
வியாபாரிகளே! குறைவான வாடகையில் பெரிய கடை அமையும். வேலையாட்களின் பிடிவாதம் குறையும். பங்குதாரர்கள் பலவகையில் உங்களை அலைக்கழித்தார்களே, இனி உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள். ஐப்பசி மாதத்தில் வராது என்றிருந்த பாக்கித்தொகை வந்துசேரும். போர்டிங், லாட்ஜிங், ஹோட்டல், வாகன உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். பதவி உயர்வுக்காக பலமுறை தேர்வு எழுதினீர்களே, தோல்விதானே மிஞ்சியது. இனி தேர்வில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வெகு நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும்.
கலைஞர்களே! கற்பனைத் திறன் அதிகரிக்கும். அயல்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.
அரசியல்வாதிகளே! உங்களைப்பற்றி தவறான வதந்திகளை பரப்பியவர்கள் இனி மன்னிப்பு கேட்பார்கள். புதுப் பதவி கிடைக்கும். விவசாயிகளே, எண்ணெய் வித்துகளால் ஆதாயமடைவீர்கள். வங்கிக் கடன் அடைபடும்.
இந்த விக்ருதி ஆண்டு இருளில் இருந்த உங்களைப் பிரகாசிக்க வைக்கும்.
பரிகாரம்:
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பெருமாளை, உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தரிசியுங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள். நலம் பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.